மருதமலையில் பாஜகவினர் திடீர் மறியல்

தமிழகத்தில் பாஜக சார்பில் வேல் பூஜை அறிவித்தது. இதையடுத்து முருகனின் அறுபடை வீடுகளிலும் வேல் யாத்திரை நடத்துவோம் என பாஜக மாநில தலைவர் முருகன் அறிவித்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

ஆனாலும் அரசின் தடை உத்தரவை மீறி, கடந்த 6ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் முருகன் துவங்கியதால், அவர் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை துவங்கி, கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் கர்நாடக துணை முதல்வர் அஸ்வந்த் நாராயண், பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேல்யாத்திரையை துவக்க சென்றனர்.

அங்கு சிறப்பு தரிசனம் செய்தனர். பின்னர் பாஜக தலைவர் முருகனிடம் பூஜை செய்யப்பட்ட வெற்றிவேல் வழங்கப்பட்டது. வெற்றிவேலோடு,  மலையில் இருந்து கீழே இறங்கி. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துககு கார்களில் சென்றனர்.

அப்போது மலையடிவாரத்தில் காத்திருந்த போலீசார், முருகன், கர்நாடக துணை முதல்வர் உள்பட முக்கிய நிர்வாகிகள் வந்த 5 கார்களை தவிர மற்ற 15 கார்களை நிறுத்தி சிறைபிடித்தனர்.

இதை கண்டித்து பாஜகவினர் மருதமலை அடிவாரத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.