கோவையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு …சீறிப்பாயும் காளைகள்!

கோவையில் தொடங்கியது ஜல்லிக்கட்டு …சீறிப்பாயும் காளைகள்!
Spread the love

கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

செட்டிபாளையம்:

கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு 4-வது முறையாக கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

கொரோனா சான்றிதழ் வைத்திருந்த மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மாடுபிடி வீரர்கள் மாடுகளை துன்புறுத்த மாட்டோம் என அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

முதல் காளையாக கோவில் காளை வாடிவாசல் வழியாக களத்திற்கு வந்தது. அதனை பிடிக்க கூடாது என அறிவிக்கப்படவே மாடுபிடி வீரர்கள் ஓரமாக நின்றனர்.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்து வந்த காளைகள் களத்தில் சிறிது நேரம் நின்று வீரர்களுக்கு விளையாட்டு காட்டியது. அதனை அடக்க முயன்ற வீரர்களையும் தூக்கி பந்தாடியது. ஒரு சில காளைகளை வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கினர்.

போட்டியில் வென்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு உடனடி பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் சிறந்த மாடு பிடி வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு மாருதி கார்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1000-த்திற்கும் அதிகமான காளைகள், 750-த்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக கோவையை சேர்ந்த 350 காளைகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் போட்டியில் பங்கேற்றன. போட்டியை கண்டு ரசிப்பதற்கு வசதியாக 45 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா காரணமாக 15 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை புதிய பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் போட்டியை கண்டு ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் யாராவது காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கு 50 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. காயம் அடைந்தவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டு டாக்டர்கள், நர்சுகள் தயார் நிலையில் இருந்தனர்.

மேலும் பார்வையாளர்கள் அரங்கில் குடிநீர் வசதி, மற்றும் அனைவருக்கும் இலவசமாக உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண், பெண் என தனித்தனியாக தற்காலிக கழிப்பறைகள், வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடைத்துறை சார்பில் 18 குழுக்களும், பொதுசுகாதாரத்துறை சார்பில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக அந்த பகுதி முழுவதும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் வி.சி.ஆறுக்குட்டி, கந்தசாமி, கஸ்தூரி வாசு, வருவாய்த்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *