குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வதோதரா உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கடந்த 14ம் தேதி வதோதராவில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மேடையில் திடீரென மயங்கி விழுந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 15ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் ஆமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு வெளியானது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே அவர் கொரோனாவின் பிடியில் இருந்து குணம் அடைந்திருப்பது உறுதியாகி உள்ளது.