மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மியான்மரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த 1ம் தேதி கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் ராணுவத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் மியான்மரில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகின்றன.
அந்தவகையில் நேற்று முன்தினம் மியான்மரின் 2வது மிகப்பெரிய நகரமான மாண்டலேவில் ராணுவ ஆட்சியை கண்டித்தும், ஆங் சான் சூகியை விடுதலை செய்யக் கோரியும் மக்கள் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு போராட்டக்காரா் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
மற்றொரு போராட்டக்காரா் நெஞ்சில் குண்டு பாய்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கூடுதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைதியான வழியில் போராட்டம் நடத்துவோருக்கு எதிராக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் படைகளை பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் தெரிவித்துள்ளார். ஆங் சாங் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா.சபை ஏற்கனவே வலியுறுத்தி இருந்த நிலையில், தேர்தல் முடிவுகளை மதித்து மக்களாட்சிக்கு திரும்புமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.