டெல்லி: வேளாண் துறை சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து இதற்கான தீர்மானம் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
பாரதீய ஜனதாவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு கட்சியின் தேசிய நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர்களும் பங்கேற்றனர். கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர், புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படும் பயன்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். பின்னர், விவசாய சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் சட்டங்கள் மற்றும் கொரோனாவை வலிமையாக கையாண்டதற்காக பிரதமரை பாராட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட கரிப் கல்யான் யோஜனா திட்டம், விரிவான மத்திய பட்ஜெட் மற்றும் சீனாவுடனான எல்லை பிரச்சினையை மத்திய அரசு திறம்பட கையாண்டது குறித்தும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் கூறுகையில்,
பாஜகவின் நோக்கம், அமைப்பு, அரசாங்கத்தை உருவாக்குவது மட்டுமல்ல, முன்னுரிமை நாட்டிற்காக பெரிய காரியங்களைச் செய்வதும், நாட்டை பெரியதாக்குவதும் ஆகும். எனவே, அமைப்பு அதன் செயல்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், பாஜக அரசு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.