புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது
Spread the love

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து இங்கு கவர்னர் ஆட்சி பிரகடனம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிப். 22 காலை அவை கூடியதும் முதல்வர் நாராயணசாமி பேசுகையில் தமது தலைமையிலான அரசு மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்திருப்பதாகவும் கூறினார். கவர்னராக இருந்த கிரண்பேடி தொல்லை கொடுத்தார். புதுச்சேரியில் எனது ஆட்சியை கலைக்க எதிர்கட்சிகளின் சதி செய்வதாக கூறினார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் முதல்வர் உரையை முடித்ததும், காங்கிரஸ் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுச்சேரியில், 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். மூன்று தி.மு.க. – எம்.எல்.ஏ.க்கள், மாகி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ஆட்சிக்கு ஆதரவளித்தனர். காங்கிரஸ் – எம்.எல்.ஏ. தனவேலு கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அமைச்சர்கள் இருவர் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சி தரப்பில் 14 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்காக கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனிடம் ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *