எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவின் 48வது ஆண்டு பயணம்

எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவின் 48வது ஆண்டு பயணம்
Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட அதிமுக இன்று 48வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்து வரும் அதிமுக இன்று 48ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1972ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி மீது எம்.ஜி.ஆர். பற்று கொண்டு இருந்தாலும், அண்ணாதுரை மீது வைத்திருந்த தீவிர பற்று காரணமாக திமுகவில் சேர்ந்தார். அண்ணாதுரை மறைவுக்குப் பின்னர், திமுக கட்சியின் வரவு செலவு கணக்குகளை எம்.ஜி.ஆர். கேட்டார். இதனால், அவருக்கு சிக்கல் எழுந்தது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி திமுகவில் இருந்து எம்ஜிஆர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதையடுத்து அதே ஆண்டில், அக்டோபர் 14 ஆம் தேதி திமுகவில் இருந்து நிரந்தரமாக எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார்.

பின்னர் அனகாபுத்தூர் ராமலிங்கம் பதிவு செய்து இருந்த அதிமுக என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்படித்தான் அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக பிறந்தது. கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே அதாவது 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அதில் வெற்றியும் பெற்றது. எம்.ஜி.ஆர். பெற்ற முதல் அரசியல் வெற்றி இது.

இதையடுத்து, 1977ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 144 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழகத்தை 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். முதல்வராக இருக்கும்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் 1987ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இதன் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஒரு அதிமுக, எம்.ஜி.ஆர். துணைவியார் ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அதிமுக உருவானது. பிரிந்த கட்சிகள் இரண்டும் இணைந்த பின்னர் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவைப் பொறுத்தவரை, கொள்கை பரப்புச் செயலாளருக்குத்தான் அதிக செல்வாக்கு. அதிகாரம் அனைத்தும். 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

மொத்தம் 16 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2016, டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்வதற்கு முன்பே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். அவர்தான் இன்று வரை முதல்வராக இருந்து வருகிறார்.

சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு அவரை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். அந்த தேர்வு அப்படியே இருக்கிறது. அவரை கட்சியில் இருந்து யாரும் நீக்கவில்லை. இந்த நிலையில் தான் கட்சி தலைமை கூடி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தேர்வு செய்தது. அதிமுகவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரன் அமமுக என்ற தனி அமைப்பை உருவாக்கி அதற்கு பொதுச் செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார். சசிகலாவை முதலில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்து இருந்தார். பின்னர் சமீபத்தில், நடந்த கூட்டத்தில் சிறையில் இருந்து சசிகலா வந்ததும், அமமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்று டிடிவி தினகரன் அறிவித்தார். இதுதான் அதுமுகவின் பயணமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *