மூணாறு: கேரளா மூணாறு அருகே பள்ளி வாசல் பவர் ஹவுஸ்சை சேர்ந்த பிளஸ்- 2 மாணவி ரேஷ்மா 17, கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் அருணை 28, போலீசார் தேடி வருகின்றனர்.
அங்கு வசிக்கும் ரஜேஷ்- ஜெஷி தம்பதியினரின் மகள் ரேஷ்மா பைசன்வாலி அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்தார். பிப்.19 ல் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் வெள்ளத்துாவல் போலீசில் புகார் அளித்தனர்.இன்ஸ்பெக்டர் குமார் தமைமையில் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி முடிந்து மாலையில் ரேஷ்மா, அருண் ஆகியோர் பவர்ஹவுஸ் வழியாக நடந்து சென்றதாக சிலர் தெரிவித்தனர்.
தனியார் தங்கும் விடுதியில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து அதனை போலீசார் உறுதி செய்தனர்.அப்பகுதியில் தொடர்ந்து தேடிய போது பவர்ஹவுஸ் அருகே மூங்கில் காட்டிற்குள் மார்பில் குத்தப்பட்ட நிலையில் ரேஷ்மா கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கு கைப்பற்றிய செருப்பு மற்றும் அலைபேசியின் உதிரி பாகங்கள் அருணுக்குச் சொந்தமானதாக தெரியவந்ததால் அவரே கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தேடி வருகின்றனர்.
ரேஷ்மாவின் பெரியப்பாவின் இரண்டாம் மனைவி மகனான அருண், ரேஷ்மாவை காதலித்து வந்துள்ளார். முறை தவறிய காதலால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அடிமாலி தாலுகா மருத்துவமனையில் ரேஷ்மா உடலுக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.