நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்கக்கோரி வழக்கு….தேசிய தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்கக்கோரி வழக்கு….தேசிய தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Spread the love

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூடுதல் தேர்வு மையங்களை அமைக்கக்கோரிய வழக்கிற்கு பதிலளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்த்த வீரபிள்ளை ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது…2021-2022 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கலந்துகொள்ள விரும்பும் மருத்துவ மாணவர்களிடம் விண்ணப்பங்களை வரவேற்று, தேசிய தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, நீட் தேர்வு வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பிவிட்டன. இதனால், இரு மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய மார்ச் 15-ந் தேதி வரை கால அவகாசம் இருக்கும்போது, இவ்வாறு தேர்வு மையங்களை நீக்குவதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிமாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் உள்ளனர். எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு வாரியம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

4 thoughts on “நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்கக்கோரி வழக்கு….தேசிய தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *