விடியலுக்கான முழக்கம்” என்கிற பெயரில் திமுக இன்று மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்கிற திட்டத்தைப் பற்றி பேசியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஸ்டாலின், “தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது. அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது’ எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 7 உறுதிமொழிகளை அறிவித்தார். அது, பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவை ஆகும்.