அனைத்து மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறைகளுக்கான ஓராண்டு வாடகை ரத்து

அனைத்து மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறைகளுக்கான ஓராண்டு வாடகை ரத்து
Spread the love

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் கடைசி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நீதிமன்றங்களும், நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகளும் மூடப்பட்டன.

நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகளுக்கு பதிவுத்துறை வாடகை மற்றும் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கிறது. கொரோனா ஊரடங்கால் வழக்கறிஞர்கள் அறைகள் மூடப்பட்டதால், ஓராண்டு காலத்துக்கான வாடகையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகளில் வழக்கறிஞர்கள் அறைகளுக்கான 1.4.2020 முதல் 31.3.2021 வரையிலான வாடகை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகளுக்கான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியன், செயலர் எஸ்.இளங்கோ, மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், செயலர் எஸ்.மோகன்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை உயர் நீதிமன்ற கட்டிடக்குழு பரிசீலித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் அறைகளுக்கான வாடகை ரத்து செய்து 26.9.2020-ல் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், மாவட்ட நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் அறைகளுக்கும் 1.4.2020 முதல் 31.3.2021 வரையிலான வாடகையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு நகலை வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் (மேலாண்மை) சரஸ்வதி அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *