திருச்சியை அடுத்த துவாக்குடி அருகே உள்ளது தேவராயனேரி நரிக்குறவர் காலனி. இங்கு நரிக்குறவர் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஊசி, பாசி, மணி மாலை விற்பது உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக அங்கு உள்ள சமுதாயக் கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடியில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 893. ஆண் வாக்காளர்கள் 447. பெண் வாக்காளர்கள் 446. காலை 11 மணி நிலவரப்படி இங்கு 122 வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் அங்குள்ள ஆலமரத்தடியில் நரிக்குறவர் இன பெண் வாக்காளர்கள் ஏராளமானவர்கள் திரண்டு நின்றனர். அவர்கள் நாங்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டோம். எங்களுக்கு ஓட்டுக்குப் பணம் கிடைக்கவில்லை எங்களுக்குக் கொடுப்பதற்காக அரசியல் கட்சி வேட்பாளர்கள் வழங்கிய பணத்தை சிலர் தங்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதாகவும், எங்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. ஆதலால் நாங்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டோம் என கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.