தமிழகம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மூன்று பகுதிகளில் இன்று ஒரே கட்டமாக நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ளது. இதே போல் 3 கட்டமாக திட்டமிடப்பட்டிருந்த அசாம் தேர்தலும் இன்றைய மூன்றாம் கட்டத்துடன் மொத்தமாக முடிவடைந்துள்ளது.
எட்டு கட்டங்களாக நடக்கும் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் இன்றோடு 3 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் ஐந்து கட்டத் தேர்தல்கள் நிலுவையில் உள்ளன.
வாக்குப்பதிவு சதவீதம் :
தமிழகத்தில் மிகக் குறைந்த அளவாக சுமார் 72% வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்ற நிலையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரி 80% வாக்குகளை பதிவு செய்துள்ளது. இதே போல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த கேரளாவில் சுமார் 73% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்தை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்), ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) ஆகிய மூன்று கூட்டணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
அசாமில் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் இன்று சுமார் 82% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அசாமில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
இதே போல் மேற்குவங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 77% வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். கடந்த இரு கட்ட வாக்குப்பதிவுகளுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐந்து கட்ட தேர்தல்கள் முடிவடைந்தவுடன் ஒட்டுமொத்தமாக ஐந்து மாநில வாக்குகளும் மே 2’ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.