தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு – தலைமை தேர்தல் அதிகாரி
Spread the love

தமிழகத்தில் குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

சென்னை: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெற்று வருகின்றன. அசாமில் நேற்று நடைபெற்ற 3-ம் கட்ட தேர்தலுடன் அங்கு தேர்தல் பணிகள் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க-தி.மு.க. இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருந்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள். கொளுத்தும் வெயிலிலும் உற்சாகமாக வாக்களிக்க வந்தனர். முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே வாக்குச்சாவடி அருகே அனுமதிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக வந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதை காண முடிந்தது.

தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதமும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீதமும், மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும், மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதமும், இரவு 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து ஓட்டு எந்திரங்களும், கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று இரவே வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் 234 தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

  • தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 83.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
  • வாக்குகள் அதிகம் பதிவான 5 தொகுதிகள்:

பாலக்கோடு – 87.33%
குளித்தலை – 86.15%
எடப்பாடி – 85.6%
அரியலூர் – 84.58%
கிருஷ்ணராயபுரம்-84.14%

  • முதலமைச்சர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6%
  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52%
  • ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடியில் 73.65%
  • கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.72%
  • டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டியில் 67.43%
  • சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் 65% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *