திருமணமாகி ஒன்றரை மாதத்தில், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த தங்கராஜ், தானும் தூக்குப்போடு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், சேலம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்தை பையனுக்கு கேக் வாங்கி கொடுத்ததால் மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், இந்த கொடூரத்தை நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்னொரு விஷயம் என்னவென்றால் தன்னை விட 20 வயது சிறிய பெண்ணை தங்கராஜ் திருமணம் செய்திருக்கிறார். அதனால் திருமணம் ஆனது முதலே சந்தேகத்துடன் மனைவியிடம் நடந்து கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் வயது 39. இவர் தனது சொந்தகார பெண்ணான மோனிஷாவை (19 வயது) கடந்த பிப்ரவரி 24ம் தேதி கல்யாணம் செய்தார். மோனிஷா பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் தங்கராஜை திருமணம் செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 20 வருடம் ஆகும். இந்நிலையில் திருமணம் ஆன சில நாளில் இருந்தே மோனிஷா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும், வாட்சப்பில் சேட்டிங்க் செய்வதாகவும் கூறி அடிக்கடி தங்கராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
ஒருக்கட்டத்தில் மோனிஷாவை தங்கராஜ் கண்டிக்கவும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட உறவினர்கள் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தங்கராஜ் வீட்டை விட்டு வேலையாக வெளியே சென்றிருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டிற்கு மோனிஷாவின் அத்தை மகன் வந்துள்ளார். அத்தை மகனுக்கு வெளியே சென்று கேக் வாங்கி வந்து மோனிஷா கொடுத்திருக்கிறார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு தங்கராஜ் வரவே, அவரிடமும் மோனிஷாவின் அத்தை மகன் பேசி விட்டு சென்றுவிட்டார். தங்கராஜோ, மோனிஷாவின். அத்தை மகன் போகும் வரை பொறுமை காத்திருந்துவிட்டு, அவர் வீட்டை விட்டு சென்ற உடன் மோனிஷாவிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. தான் இல்லாத போது எதற்கு அத்தை மகன் வந்தான் என்றும், எதற்காக கேக் வாங்கி கொடுத்தாய் எனவும் கேள்வி கேட்டு தங்க ராஜ் சண்டை போட்டுள்ளார். அப்போதும் குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இரவில் மீண்டும் தங்கராஜ் மோனிஷா தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் தங்கராஜ், கேபிள் வயரை கட் செய்ய பயன்படுத்தும் கத்தியால் மோனிஷாவின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், கேபிள் வயரால் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தங்கராஜ் கேபிள் ஒயரில் தூக்கில் தொங்கிய நிலையிலும், மோனிஷா தரையில் படுத்த நிலையிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தன்னை விட 20 வயது சிறிய பெண்ணை திருமணம் செய்தவர், சந்தேகத்தால் திருமணமான ஒரு மாதத்தில் மனைவி கொன்று, தானும் தற்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.