கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில், போலீசார் கையாளும் வன்முறை??

கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில், போலீசார் கையாளும் வன்முறை??
Spread the love

மத்திய பிரதேசத்தில் மாஸ்க் போடவில்லை என்பதற்காக, நபர் ஒருவரை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கி, போலீசார் தரையில் தள்ளி அடிக்கும் வீடியோ ஒன்று பதறவைக்க கூடியதாக இருக்கிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. 2வது அலை மிகக் கடுமையாக பரவி வருவதால், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பரபரப்பு மிகுந்த சாலையில், நபர் ஒருவர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளதாக தெரிகிறது. அவரை மடக்கி பிடித்த போலீஸார், மாஸ்க் அணியாதது குறித்து விசாரித்துள்ளனர். ஆனால், என்ன ஏதென்று தெரிவதற்குள்ளாகவே, மாஸ்க் அணியாத ஆத்திரத்தில் 2 போலீஸார் அந்த நபரை சரமாரியாக தாக்குகிறார்கள். அந்த நபரின் தலைமுடியை பிடித்து இழுத்து ஓங்கி அறைகிறார்கள்.

பிறகு அவரை கீழே தள்ளிவிடவும், அந்நபர் கதறி அழுதபடியே, தார் ரோட்டில் சுருண்டு விழுகிறார். அப்போது அவர் மீது ஒரு போலீஸ்காரர் அந்த நபரின் கழுத்து பகுதியில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அடிக்க ஆரம்பிக்கிறார். 2 போலீஸ்காரரின் மிருக அடி தாங்க முடியாமல், சம்பந்தப்பட்டவர் பதறியும், கதறியும் அழுவதை, அங்கிருந்த மக்கள் சுற்றிலும் நின்று செய்வதறியாது வேடிக்கை பார்க்கிறார்கள்.. ஆனால் யாரும் வந்து இதை தடுக்கவில்லை!

சம்பந்தப்பட்ட நபர் பெயர் கிருஷ்ணக கெயர், வயது 35 ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ டிரைவராம். இவரது அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை உள்ளதால், சாப்பாடு எடுத்துக் கொண்டு போயுள்ளார். அப்படி போகும்வழியில்தான் போலீஸாரிடம் மாஸ்க் போடாமல் சிக்கி உள்ளார். ஆனால், இவர் மாஸ்க் போட்டுக்கொண்டுதான் வெளியே வந்துள்ளார். வரும்வழியில் அந்த மாஸ்க் கழண்டி விழுந்துள்ளது. இதை பற்றி போலீசாரிடம் விளக்கம் சொல்வதற்கு முன்பேயே அவர்கள் 2 பேரும் அடிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

ஆனால், இந்த வீடியோ வைரலானபிறகே அவர்கள் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்களாம்.

இத்தகைய கொடுமையான செயலுக்கு, ராகுல்காந்தி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா விதிகளை அமல்படுத்தும் போர்வையில் இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மையை நாடு ஏற்கவில்லை என்றும், பாதுகாப்பு போலீசார் சித்திரவதை செய்தால், பொதுமக்கள் எங்கு செல்வார்கள்? என்றும் ராகுல் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.

யாராவது மாஸ்க் போடவில்லை என்றால், அவர்களை பிடித்து தாற்காலிகமாக ஜெயிலில் வைக்க வேண்டும். இதுதான் மத்தியப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவு. ஆனால், இந்த 2 போலீஸாரும் அதை செய்யாமல், கண்மூடித்தனமாக தாக்கியதை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு மாஸ்க் தெரியாமல் கழண்டி விழுந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்பதுதான் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அன்று, அமெரிக்காவில் ஜார்ஜை அடித்து, கழுத்தை நெறித்தார்களே, கிட்டத்தட்ட அப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *