அதிகரிக்கும் கொரோனா- சென்னையில் இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை

அதிகரிக்கும் கொரோனா- சென்னையில் இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
Spread the love

சென்னையில் இன்று முதல் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது. இதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கூடும் இடங்களான மார்க்கெட் பகுதிகள், வழிபாட்டு தலங்கள், கல்யாண மண்டபங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பெரிய வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. சென்னையில் பொது மக்களின் வெளியே செல்லாமல் தேவையான அனைத்து பொருட்களை வாங்கும் விதமாக நடமாடும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியது
ஆனாலும் கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் சென்னையில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது. பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் மருத்துவமனை வர வேண்டும் என அவ்வபோது சுகாதாரத்துறை அறிவுறுத்தி வந்தது. சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கொரோனா அறிகுறி இருந்தால், தனிமைப்படுத்தி விடுவார்களோ? என்ற அச்சத்தில் பொதுமக்களுக்கு யாரும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்வதை தவிர்த்து வந்தனர்.

கட்டுப்பாட்டு பகுதி

அதற்கு மாறாக வீட்டிலேயே காய்ச்சல் மாத்திரைகளை போட்டு கொண்டு, அதற்கான சிகிச்சைகளை அவர்களே எடுத்துகொண்டனர். இதனால் பலருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு அதிகரித்து, கடைசி நிமிடத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறிய புதிய நடவடிக்கைகளில் களம் இறங்கியது. அதன்படி ஊரக உள்ளாட்சித்துறையின் உதவியோடு, தன்னார்வலர்களை பணியில் அமர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அந்த தெரு அல்லது பகுதி, கட்டுப்பாட்டு பகுதியாக கொண்டு வரப்பட்டு, வீடு வீடாக தினமும் சென்று இந்த தன்னார்வலர்கள் அங்குள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்வர். அவ்வாறு பரிசோதனையில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்த திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது. ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று (வியாழக்கிழமை) முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என பரிசோதனை மேற்கொள்ள தன்னார்வலர்களை களம் இறக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

12 ஆயிரம் களப்பணியாளர்கள்

சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரும் வெளியே வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களை அந்த பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாமுக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யயப்படும். இந்த கொரோனா பரிசோதனையின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த திட்டம் நல்ல பலன் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதலாக களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *