பாஜகவிற்காக பிரச்சாரம் செய்த பிரமுகர் வீட்டில் – பெட்ரோல் குண்டு வீச்சு

பாஜகவிற்காக பிரச்சாரம் செய்த பிரமுகர் வீட்டில் –  பெட்ரோல் குண்டு வீச்சு
Spread the love

கன்னியாகுமரி : நித்திரவிளை அருகே பாஜக பிரமுகர் வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (வயது 51). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த 1 1/2 வருடத்திற்கு முன் விடுமுறைக்கு ஊருக்கு வந்துவிட்டு கொரோனா காரணமாக திரும்ப செல்ல முடியாமல் இங்கேயே இருந்து உள்ளார்.

தற்போது இவர் காஞ்சாம்புறம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் பாஜக கட்சி அனுதாபியாகவும் உள்ளார்.

இந்த நிலையில் நடந்து முடிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டமன்ற தொகுதி தேர்தலுக்காகவும் பாஜக கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பு பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வேளையில் வீட்டின் வெளியே ஏதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. உடனே கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகளுடன் வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்கத்தில் தீ குபீர் என கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்துள்ளது.

வீட்டின் நாலாபுறங்களிலும் குப்பிகள் உடைந்து சிதறி கிடந்துள்ளன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். தீ முழுவதும் எரிந்து பின்பு தான் வீசியது பெட்ரோல் குண்டு என்று தெரியவந்தது.

இது சம்பந்தமாக கிருஷ்ணகுமார் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா என விசாரணை நடத்திய போலீசார், தடயங்கள் எதுவும் சிக்காததால் குற்றவாளிகளை கண்டறியும் வேலையில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *