மு.க ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் முக்கிய வேண்டுகோள்

மு.க ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் முக்கிய வேண்டுகோள்
Spread the love

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சனாதன சக்திகளின் சதிகளை முறியடித்து சனநாயகத்தையும் தமிழகத்தையும் காப்பாற்றிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கொள்கைக் கூட்டணியை உருவாக்கி மகத்தான வெற்றியைப் பெற்று முதல்- அமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு எமது உளமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சனாதனத்துக்கு எதிரான போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக 4 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றி பெறச்செய்து ஆதரவளித்த தமிழக மக்களுக்கு தலை வணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வராகப் பொறுப் பேற்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கொரோனா பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களுக்கு உதவும்விதமாகக் குடும்பம் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவோம் என தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின் படி அந்த உதவித் தொகையை உடனே வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *