உலக ஆஸ்துமா தினம்!

உலக ஆஸ்துமா தினம்!
Spread the love

1998-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டு மே மாதமும் முதல் செவ்வாய்கிழமை உலக ஆஸ்துமா தினமாக, Global Initiative for Asthma (GINA) என்ற அமைப்பு சார்பாக அனுசரிக்கப்படுகிறது (இன்றைய தினம்). ஒவ்வோர் ஆண்டும் ஆஸ்துமா குறித்த ஒவ்வொரு கருப்பொருள் வெளியிடப்படும்.
இந்த வருடத்துக்கான கருப்பொருள் – ‘இது, மிக சீக்கிரமும் இல்லை; மிக தாமதமும் இல்லை. இதுதான் மூச்சுத் தொடர்பான நோயைச் சந்திக்க மிகச் சரியான நேரம்’ (Never too early, never too late. It’s always the right time to address airways disease). இன்றையத் தேதியில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை அச்சுறுத்தும் நோய்களில் மிக முக்கியமான ஒன்று, ஆஸ்துமா. உலக சுகாதார அமைப்பின் (WHO) கணக்குப்படி, உலகளவில் 235 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு வயது முதல் இறுதிக்காலம் வரை தொடரும் இந்தப் பிரச்னையை, ‘முழுமையாக சரிசெய்ய முடியாது என்றாலும், கட்டுக்குள் வைத்திருக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

”நுரையீரலில் ஏற்படும் ஒவ்வாமைப் பிரச்னைதான் ஆஸ்துமா. மாறுபட்ட வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, துரித உணவுகள், புகைப்பழக்கம், பரம்பரை – இவைதான் ஆஸ்துமாவுக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு பரம்பரைக்காரணமாகத்தான் ஆஸ்துமா ஏற்படுகிறது. ஒருவருக்கு அடிக்கடி சளிப் பிடிப்பது, சிரித்தாலோ அதிகம் பேசினாலோ இருமல் வருவது, அடிக்கடி தும்மல் வருவது, மூச்சுவிடும்போது விசில் போன்ற சத்தம் ஏற்படுவது போன்றவை ஆஸ்துமாவுக்கான முக்கியமான முதல்நிலை அறிகுறிகள். இவை தொடரும்பட்சத்தில், மூச்சுக்குழாய் பாதிக்கப்படும். பிரச்னையைச் சரிசெய்யாமல்விட்டுவிட்டால், தொடர்ச்சியான ஒவ்வாமை காரணமாக மூச்சுக்குழாயின் தசைகள் தளர்ச்சியடைந்து சுருங்கிவிடும். மூச்சுவிடும்போது விசில் போன்ற சத்தம் அதிகரிப்பது, மூச்சிரைப்பு, நெஞ்சில் இறுக்கம் ஏற்படுவது போன்றவை தெரியத் தொடங்கும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள், தாமதிக்காமல் நுரையீரல் பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம். ஆஸ்துமா பாதிப்பை உறுதிப்படுத்த, சம்பந்தப்பட்ட நபர் நுரையீரல் செயல்திறன் (Pulmonary funtion Test) என்ற டெஸ்டுக்கு உட்படுத்தப்படுவார். மூச்சுக்குழாயின் சுருங்கி விரியும் தன்மை எந்தளவுக்கு உள்ளது என்பதைப் பொறுத்து பாதிப்பு உறுதிசெய்யப்படும்.

சரியாகச் சிகிச்சையைத் தொடராத பட்சத்தில் நுரையீரலில் ஒவ்வாமை அதிகமாகும். ஒவ்வாமையை அதிகப்படுத்துவதில், பருவநிலை மாற்றம், விலங்குகள், பூக்களின் மகரந்தம், ஏ.சி., சிகரெட் புகை, மாசு, கழிவுகள் போன்ற சூழல்கள் பிரதானமானவை. நோயாளிகள், தங்களுக்கு எந்தச் சூழல் பிரச்னையை அதிகரிக்கிறது என தெரிந்துகொண்டு அதைத் தவிர்க்க வேண்டும். கோடைக்காலத்தைப் பொறுத்தவரையில் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (Influenza virus), டெஸ்பிக்டோ வைரஸ் (Despicto virus) போன்றவை அதிகளவில் பரவும். ஆஸ்துமா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நாள் முதல், நோயாளிகள் இரண்டு வகையான இன்ஹேல்டு மருந்துகளை (Inhaled Medicine) கையிலேயே வைத்திருக்க வேண்டும். ஒன்று, கட்டுப்படுத்தக்கூடிய மருந்து (Controlled Medicine), மற்றொன்று, நிவாரண மருந்து (Releiver Medicine).

கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை, மருத்துவர்கள் சொல்லும் விகிதத்தில் தினமும் காலை – இரவு இரண்டு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘சால்புடமால்’ (Salbutamol) எனப்படும் நிவாரண மருந்தை எப்போதும் கையிலேயே வைத்திருக்க வேண்டும். ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகும்போதெல்லாம் இதை உபயோகப்படுத்தி அதிலிருந்து விடுபடலாம்.

ஆஸ்துமா நோயாளிகள், அலெர்ஜன்ஸ் (Allergens) மற்றும் தொற்றுப் பிரச்னைகளைத் தவிர்க்க, அதிக மாசு இருக்கும் இடம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சூழல், பயணம் செய்யும் வேளை போன்ற சூழல்கலில் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம், கர்சீஃப் மூலமாக மூக்கை மட்டுமாவது மூடிக்கொள்ள வேண்டும். கோடைக்காலம் வந்தவுடன் எல்லோரும் விடுமுறைக்காக வெளியூர் செல்வார்கள். வாகனப் புகை, மாசு, குப்பைகள், மற்றவரின் தும்மல், இருமல் மூலம் பரவும் தொற்றுகள் இவையெல்லாம் கோடையில் அதிகமான தொற்றைப் பரப்புமென்பதால், ஆஸ்துமா நோயாளிகள் அவற்றைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். முடிந்தவரை தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கென ஒவ்வோர் ஆண்டும் போட்டுக்கொள்வதெற்கென தடுப்பூசிகள் இருக்கின்றன. அவற்றில், வெயில் காலத்துகென இருக்கும் ஃப்ளூ (Flu), நிமோனியோ தடுப்பூசிகளை தவிர்க்க வேண்டாம்’’ என்கிறார் ஜெயராமன்.

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது, இருமல் வருகிறது என்றால், பெற்றோர்கள் அதை அலட்சியம் செய்ய வேண்டாம். உலகளவில் 13.5 சதவிகித குழந்தைகளும், இந்தியாவில் 15 முதல் 18 சதவிகிதக் குழந்தைகளும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள். யூ.எஸ்.சி (University of South Carolina) என்ற பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவின் படி, ஆஸ்துமா பாதித்த குழந்தைகளில் 51 சதவிகிதக் குழந்தைகள், உடல்பருமன் பிரச்னைக்கும் உள்ளாகிரார்களாம். அடுத்த தலைமுறையைத் தாக்கும் இந்தப் பிரச்னைக்கு, காற்று மாசுபாடு முக்கியமான காரணம்! ‘ஆஸ்துமா ஒரு வாழ்நாள் பிரச்னைதான் என்றாலும், அதைக் கண்டு பயப்படவேண்டியதில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இன்றைய மருத்துவத்தால், அதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக, மூச்சுக்குழாய் சுருங்கிவிட்டாலும்கூடச், அதன் இயக்கத்தைச் சீர்செய்யும் இன்ஹேலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.!
தகவல்
யோகா ஆசிரியர்
பெ.விஜயகுமார்
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை
திருச்சிராப்பள்ளி
செல் 9842412247

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *