மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் ஆய்வு

தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் இன்று இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக கோவிலில் தேவ பிரசன்னம் நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு, கடந்த 2ம் தேதி மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட ஊழியர்களின் அஜாக்கிரதைதான் என தெரிவித்தார்.

மேலும் முழுமையான விசாரணையின் முடிவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீ விபத்தால் சேதமடைந்த மேற்கூரையை சரி செய்ய 50 லட்சம் மற்றும் கோவிலின் உள்ளே தீயணைப்பு கருவிகள், உட்பிரகாரத்தில் செய்யப்படுகின்ற பணிகள் அனைத்தும் என 35 லட்சம் ரூபாயும் தொடர்ந்து புனரமைப்பு பணிக்காக முதற்கட்ட மாக 85 லட்ச ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் 20 அறநிலையத்துறை இணை ஆணையர்கள் தேவை உள்ளது . அவர்களை நிரப்ப கூடிய திறமை வாய்ந்த அதிகாரிகள் இல்லை என்றும் அவர்களை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஆகம விதிகளின் படி பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறினார்.

சைவம், வைணவம் என தனித்தனியாக 6 பயிற்சி மையங்களில் 207 பேர் ஆகம விதிகளின்படி தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தேவை எனில் மீண்டும் புத்தாக்க பயிற்சி அளித்து அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீண்ட நாட்களாக கோயில் குத்தகைதாரர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் மற்றும் குத்தகை பாக்கி வசூலிக்க துரிதமான நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்தார். ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஆர்.காந்தி முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.