தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன?

தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – 6 கோடி டோஸின் நிலை என்ன?

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் உபரியாகித் தேங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.ஒக்லஹோமா மாகாணத்துக்கு வாரந்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த மாகாணம் ஒரு மாதத்துக்கும் மேலாக புதிதாக கோவிட் தடுப்பூசிகளை வாங்கவே இல்லை. இதனால், அமெரிக்க அரசிடம் தடுப்பூசிகள் லட்சக் கணக்கில் உபரியாவது நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என, பல்வேறு விளம்பரங்களையும் சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது. இருந்தும் அங்கு தடுப்பூசி உபரியாவதைத் தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.