புதுவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் கொரோனோ காலத்தில் தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து, திமுக சார்பில் அக்கட்சி எம்எல்ஏக்கள் முன்னிலையில் கல்வித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் கொரோனோ காலத்திலும் இணைய வழி வகுப்பு மூலம் அனைத்து தனியார் பள்ளிகளும் வகுப்புகள் நடத்தி வருகிறது. மேலும் முழுமையான கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப் படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கரோனா பேரிடர் காலத்திலும், அனைத்து பெற்றோர்களையும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் என வலியுறுத்தும், தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையைக் கண்டித்து, புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், எம்எல்ஏக்கள் சம்பத், கென்னடி உள்ளிட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளி கட்டண கொள்ளையைக் கண்டித்தும், இது தொடர்பாக நீதிமன்றம் வலியுறுத்திய கல்வி கட்டண முறையை அரசு அமல்படுத்த வலியுறுத்தியும், முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுவை அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். அரசுக்கு எதிராகவும், கல்வித்துறைக்கு எதிராகவும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.