எடப்பாடிக்கு செக் வைத்து ஆடியோ வெளியிட்ட சசிகலா..

ஒவ்வொரு ஆடியோவாக சசிகலா தரப்பு வெளியிட்டு வரும் நிலையில், இன்னொரு ஆடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளது. கடைசியாக இன்று வெளியிட்டுள்ள ஆடியோவானது எடப்பாடி பழனிசாமிக்கே செக் வைத்து பேசப்பட்டுள்ளது. சாதியை மையப்படுத்தி சசிகலா அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

அதிமுகவில் அதிகார மோதல் வலுப்பெற்று வருகிறது. இதற்கு நடுவில் சசிகலாவின் அரசியல் வருகையானது ஊர்ஜிதமாகி வருகிறது. அதிமுக ஆதரவாளர்கள், நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஒவ்வொரு ஆடியோவும் வெளியாகி வருகிறது. அனைத்திலும், அதிமுகவை கைப்பற்றும் நோக்கமே தென்பட்டு வருகிறது.

“தொண்டர்கள்தான் கட்சி என்று நான் நினைக்கிறேன்.. கவலைப்படாதீங்க.. விரைவில் நான் எல்லோரையும் சந்திக்கிறேன்.. நல்லபடியாக கட்சியை கொண்டு வருவோம்.. ஆட்சிக்கும் வருவோம். எல்லாமே என் பிள்ளைகள்தான்.. கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் நிச்சயம் வருவேன். தொண்டர்கள் மனக்குமுறலை சொல்கிறாகள்.. அந்த குமுறலை என்னால் தாங்க முடியலை.. அதனால்தான் தொண்டர்களிடம் பேச ஆரம்பித்து இருக்கிறேன்” என்று சசிகலா காரணங்களை விளக்கி கொணடு வருகிறார்.

இத்தனை நாளும், அதிமுகவை கைப்பற்றுவோம் என்று சசிகலா மேலோட்டமாக சொல்லி வந்த நிலையில், ஒரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமி பெயரை பயன்படுத்தியதே இல்லை. அம்மா, கட்சி, ஆட்சி, தொண்டர்கள் என்றே சசிகலா ஜாக்கிரதையான வார்த்தையையே பயன்படுத்தினார். இவர் மட்டுமில்லை, இவருடன் பேசும் மற்ற நிர்வாகிகளும், கவனத்துடனேயே பேசினார்கள். ஆனால் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி பெயரை தன்னுடைய கடைசி ஆடியோவில் பயன்படுத்தி இருக்கிறார் சசிகலா. அத்துடன் சாதி குறித்தும் அதில் பேசி உள்ளார்.

“நான் சாதி பாக்குற ஆள் கிடையாது.. அப்படி பார்த்திருந்தால் எடப்பாடியை முதல்வர் ஆக்கியிருப்பேனா?” என்று அந்த வெளியாகி உள்ளது. இந்த ஒரு வரியில் 3 விஷயங்கள் அடங்கி உள்ளது. ஒன்று, எடப்பாடியின் பெயரை பயன்படுத்தியது, 2வதாக தன்னால்தான் எடப்பாடி முதல்வரானார் என்பதை சொல்கிறார், 3வதாக சாதியை கையில் எடுக்கிறார் சசிகலா.

ஜெயலலிதா ஆட்சியில், சசிகலா லாபி செய்தபோது, முக்கால்வாசி அதிமுக நிர்வாகிகள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பலனடைந்தவர்களில் பெரும்பாலானோர் இவர்களே. முன்னாள் முதல்வர், எடப்பாடி பழனிசாமி அன்று பொறுப்புக்கு வந்தபிறகு, முக்குலத்தோர் சமுதாய பிரதிநிதித்துவம் வெகுவாகு குறைந்து போய்விட்டது. மாறாக கொங்கு மண்டலத்தை சேர்ந்தோர் பதவி அதிகாரம் பெற்றனர். நடந்து முடிந்த ஆட்சியில்கூட எடப்பாடியாருக்கு நெருக்கமானவர்கள் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களாகவே இருந்தனர். முக்குலத்தோருக்கான பிரதிநித்துவத்தை பிரதானமாகக் கொண்ட கட்சியாக அமமுக பார்க்கபடுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் சாதி என்ற அஸ்திரத்தையும் ஆயுதமாக எடுக்கிறார் சசிகலா. மேலும் இது ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வார்த்தைகளும் இல்லை என்பதும் தெரியவருகிறது. அப்படியானால், சாதி பார்க்காமல்தான் ஓபிஎஸ் முதல்முறை முதல்வரானாரா? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை சசிகலா நெருங்கி கொண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது.