பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் – கமிஷனர் அதிரடி உத்தரவு

கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் பிரபல ரவுடி சிடி மணி. இவர் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார். திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல தாதா ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட அவர் மறைவுக்கு பிறகு இவர் தலைமையில் புதிய ரவுடி டீம் உருவானது. அதிலிருந்து இவரும் பிரபல தாதாவாக உருவெடுத்தார்.

கொலை வழக்குகள், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளில் அவர் ஏற்கனவே மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சிடி மணியை கொலை செய்ய முயற்சி நடந்தது.இந்நிலையில் ஜூன் 2 ஆம் தேதி சென்னையின் டாப் 10 ரவுடிகளில் முதலிடத்தில் இருக்கும் பிரபல ரவுடி மணிகண்டன் என்ற சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நீண்டகாலம் தலைமறைவாக இருந்த சிடி மணி, காவல்துறையால் பிடிக்கப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இதையடுத்து பிரபல ரவுடி சிடி மணியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் சங்கர் ஜிவால் காவல் ஆணையராக பொறுப்பேற்றதும் ரவுடிகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.